கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானதால், தற்போது அந்த தொகுதி காலியாகி உள்ள நிலையில் அங்கு போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக சார்பில் அங்கு களம் இறங்க நயினார் நாகேந்திரன் தற்போதிருந்தே கட்சித் தலைமைக்கு நிர்பந்தித்து வருகிறார்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத ஒரே மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. அங்கு மட்டும்தான் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளே மாறி மாறி இருந்து வருகிறது.
இன்று அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேசியதாவது “அப்பாவின் நண்பர்கள் பலரும் நான் அரசிலியில் ஈடுபட வேண்டும் என விரும்புகின்றனர்.
அதே சமயம் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதிருந்தே விஜய் வசந்திற்கு மேலிடத்தில் லாபி தொடங்கிவிட்டதாகவும், கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்தை தவிர வேறு யார் நின்றாலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என பேச்சுகள் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டியிட நயினார் நாகேந்திரன் முனைப்பு காட்டி வருகிறார்.
கடந்த தேர்தலில் கூட பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் என இருவருமே தோல்வியை தழுவியுள்ளதால், இருவரையுமே டெல்லி பாஜக தலைமை சமமாகவே பார்க்கும் என தெரிவிக்கிறார்கள்.
அதே சமயம் கன்னியாகுமரி தொகுதியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே வெற்றி வாய்ப்பு உண்டு என்பதால், இயல்பாகவே அங்கு பொன்.ராதாகிருஷ்ணனே மீண்டும் எளிதாக வேட்பாளராக களம் காணுவார் என்கிறார்கள்.