“பாஜக என்ற பெரிய கட்சிக்குள் ரஜினி வந்தால் எதுவும் மாறாது” பாஜக நிர்வாகியின் அதிரடி விளாசல்

0
125

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திராவிட கட்சிகளிலிருந்தும், வெவ்வேறு கட்சிகளில் இருந்தும் விலகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக ராதாரவி, கு.க. செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், நேற்று பாஜகவின் சென்னை தலைமையகமான கமலாலயத்தில் நடந்த கட்சியில் இணைப்பு விழாவுக்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரான கரு. நாகராஜன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் ரஜினியின் அரசியல் வருகையால் பாஜகவை பொறுத்தவரை எந்த மாற்றமும் ஏற்படாது.

பாஜக ஒரு மிகப்பெரிய தேசிய கட்சி. ஒரு தனிநபர் வருகையால் 18 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு தேசிய கட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.

 

அதேவேளையில் ரஜினியின் வருகையை பாஜக என்றும் வரவேற்கிறது” என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், “ரஜினி அரசியலுக்கு வந்தால், பாஜகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிதான் முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு புயல் உருவாகிறது. அந்த புயல் உருவாகும்போது எங்கே இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தப் புயல் கரையைக் கடக்கும்போதுதான் புயல் யார் பக்கம் என்பது தெரிய வரும்”

மேலும், “தமிழகத்தில் பாஜக தலைமையில் முதல்வராக ஒருவர் வர வேண்டும் என்றால், அது மக்கள் கையில்தான் இருக்கிறது” என்று கரு நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது கட்சி நிர்வாகிகள் மற்றும் ரஜினி ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகுருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!
Next articleஇந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 86 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!