கடலூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கா விட்டால், மாவட்ட ஆட்சியரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில்
இருந்தபோது, 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பிறகு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை போன்ற காரணம் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த 3 மாத கால அவகாசத்துக்குள் மனுதாரர் வாரிசு கேட்டு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.
மனுதாரர் வேலைக் கேட்டு 2005ஆம் ஆண்டே விண்ணப்பித்துள்ளார். அப்போது, அரசு பணி நியமனத்துக்குத்தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து 2011 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மனுதாரர் ரவிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி, வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பணி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி முதல் மனுதாரர் ரவி அரசு ஊழியராக கருதப்படுவார். மேலும், அவருக்கு கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த ஊதியத்தை, மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.