ஆந்திர மாநில மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி
மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் உள்ளூர் தொழிற்துறை/ஆலை தொழிலாளர் சட்டம் 2019 ஆந்திர சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 22) நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் மாநில மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் போதிய திறன்களுடன் தொழிலாளர்கள் இல்லாவிடில், மாநில அரசுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து பின்னர் வேலை கொடுக்க வேண்டுமென்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்திற்கு ஏற்ப அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு உள்மாநில மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிய இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்பது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய தேர்தல் உறுதிமொழிகளில் ஒன்றாகும். இச்சட்டத்துடன், நிரந்த ஓபிசி ஆணையம் அமைப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு நியமன பதவிகளிலும், அரசு நியமன பணிகளிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கும், மகளிருக்கும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
நிரந்தர ஓபிசி ஆணையம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைய விரும்பும் பிரிவினர், சேர்க்கப்பட்ட, சேர்க்கப்படாத பிரிவினர் பற்றிய புகார்களையும், கோரிக்கைகளையும் விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதும் இந்த ஆணையத்தின் முக்கிய பொறுப்பாகும்.
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துவரும் இந்நிலையில் ஆந்திர அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.