புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபட முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுவாக ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபட வரும் பக்தர்கள் கோவிலின் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண தரிசனத்திற்கு மட்டுமின்றி கட்டணமில்லா தரிசனத்திற்கும் கோவில் இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.srirangam.Org என்கிற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.