பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வாரத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மத்திய அரசு, 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு 2009ஆம் ஆண்டு விதிகளை வகுத்தது. ஆனாலும், இந்தச் சட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.
மகன்களால் பராமரிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகர்களைப் பெற மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்தச் சட்டப் பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் படி பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் புகார் அளித்தால் 6 வாரத்திற்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.