தற்போது தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் “அம்மா நகரும் ரேஷன் கடைகள்” எனும் புதிய திட்டம் செப்டம்பர் மாதம் 21 தேதி முதல் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ரேஷன் பொருள்களை தங்களின் வீட்டு அருகிலே பெற்றுக்கொள்ளலாம்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் இந்தத் திட்டத்தின் பயன்கள் குறித்து கூறியதாவது இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வாழும் மக்கள் மட்டுமில்லாமல் கிராமத்தில் வாழும் மக்களுக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பொதுவாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு நெடுநேரம் காத்திருந்து அதன் பின்பே பொருள் வாங்கி அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். ஆனால் இத்திட்டத்தின் மூலம் வீடுகளின் அருகிலே வந்து தங்களின் ரேஷன் பொருள்கள் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 400 கடைகளும் பிற மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப கடைகளும் தொடங்க உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் 4449 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அவர்களின் உரங்கள், தானியங்கள் உள்பட பிற பொருட்களையும் தங்குதடையின்றி பெற்றுவருகின்றனர் என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.