தைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்! உச்சகட்ட அதிருப்தியில் திருமாவளவன்
சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.குறிப்பாக பாமக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமை இதை பெரியதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.
இதை சுதாரித்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உடனடியாக சாதி மற்றும் மதவாத கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.பாமக மற்றும் விசிக தலைமை வெளியிட்ட இந்த கருத்துக்களை கவனிக்கும் தற்போது அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தான் அணி மாறுவது குறித்த பேச்சுக்கள் தற்போது ஆரம்பித்துள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி உள்ளதால் கடந்த மக்களவை தேர்தலின் போது நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போதிய இடங்களை பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் அடுத்து நடந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக தங்களிடம் இருந்த இரண்டு தொகுதிகளை அதிமுகவிடம் இழக்க நேர்ந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக பெற்ற வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.
வட மாவட்ட வாக்குகளை கவர அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதை போல திமுக கூட்டணியில் விசிக உள்ளது என்றாலும் அக்கட்சியால் பாமக பெற்ற வாக்குகளை போல பெற முடியவில்லை என திமுக தலைமை உணர்ந்துள்ளது.குறிப்பாக தமிழகத்தில் வன்னியர் எதிர்ப்பு அரசியல் இனி எடுபடாது என உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் பல போராட்டங்களுக்கு பிறகு துரைமுருகனுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அளித்தார். அடுத்ததாக விக்கிரவாண்டி தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு அடுத்ததாக வன்னிய சமுதாயத்தை சேர்ந்த புகழேந்தி என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அதேநேரத்தில் விடுதலை சிறுத்தைகள் தரப்பிலும் கூட்டணி மீது அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக கடந்த காலங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையிலேயே கருத்து கூறி வருகின்றனர்.இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பெயரளவில் வருத்தம் தெரிவித்தாலும் விசிக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.அடுத்ததாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதியை தவிர வேறு தொகுதிகளுக்கு திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அழைக்காமல் புறக்கணித்தது என பல விவகாரங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மருத்துவர் ராமதாஸ் கூறிய கருத்து விசிக தரப்பை மேலும் அதிருப்தியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போதைய நிலையில் அதிமுக மற்றும் பாமக இடையே சுமூகமான உறவு இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக வைக்கும் நிபந்தனைகள் என்னென்ன? அதை அதிமுக ஏற்று கொள்ளுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குறிப்பாக பாமகவின் சார்பாக அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் உள்ளிட்ட நிபந்தனைகள் வைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிபந்தனைகள் நிராகரிக்கப்படும் நேரத்தில் பாமக அணி மாறவும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் அதிமுகவை எவ்வகையிலாவது பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக தரப்பு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றியை தேடித் தந்த மற்றும் வடமாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் வாக்கு வங்கி உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு எப்படியாவது இழுத்து விட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் புதியதாக பொறுப்பேற்ற துரைமுருகனும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் பாமகவின் கூட்டணி கதவுகள் திறந்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவர் ராமதாஸ் பேட்டியின் போது தெரிவித்துள்ளார் என்றும் கருதப்படுகிறது.
இவ்வாறு பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் தற்போதும் இருக்கும் கொஞ்சம் மரியாதையும் போய் விடும் என நினைத்த திருமாவளவன் அடுத்த தேர்தலில் விசிக தனது சொந்த சின்னத்தில் தான் போட்டியிடும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.இது பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதற்கான மறைமுக எதிர்ப்பாகவே கருதப்படுகிறது.ஆனால் திமுக தலைமையோ எப்படியாவது பாமகவை திமுக கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என்று தைலாபுர வாசலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.