நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்:
- அக். 15ம் தேதி முதல் 50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிடும்)
- அக். 15ம் தேதி முதல் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
- விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்
- சமூக, அரசியல், மத மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி. (அதிகபட்சமாக 100 பேர் வரை பங்கேற்கலாம். உள்ளரங்கில் 50% இருக்கை அளவுடனும், அதிகபட்சமாக 200 பேர் வரையும் பங்கேற்கலாம்)
- அக். 15ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். (மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்)
- மாநில, மாவட்டங்களுக்குள்ளான போக்குவரத்திற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்க கூடாது.
- கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளுக்கு வெளியே எந்தவிதமான கட்டுப்பாடுகளையும், மத்திய அரசிடம் முன்கூட்டியே கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது.
- கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக். 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வுகள் பொருந்தாது என்றும் மற்ற இடங்களுக்கு மட்டுமே இந்த புதிய தளர்வுகள் பொருந்தும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.