தமிழகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட அரசு துறை பணிகளுக்கான குரூப் 2 உள்ளிட்ட 7 துறைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட்டதோடு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த விவரங்களையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
குரூப் 2 பிரிவில் 1,334 காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடைபெற்றது. தேர்வில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற 19ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளிகள் சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 16ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 முதல் 29ம் தேதி வரை நடந்த பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 19ம் தேதி நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணி, மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அதிகாரி மற்றும் தமிழ்நாடு சிறை பணி உளவியலாளர் பதவி, சிறை சார்நிலை பணி அதிகாரி பதவி, பொது சார்நிலை பணி, தொல்லியல் அலுவலர் பதவி உள்ளிட்ட பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகின்ற 7 முதல் முதல் 14ம் தேதி வரை தங்களது சான்றிதழ்களை அருகில் உள்ள இ – சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களை டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.