15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை!

0
73

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தோச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் மாணவா் சேர்க்கை தொடங்கிய 14 நாட்களிலே சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது 15 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.80 லட்சம் மாணவா்கள் சோக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக கடந்த ஆண்டு வரை தனியாா் பள்ளிகளில் படித்த 2.5 லட்சம் மாணவா்கள் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
கொரோனா பரவல் காரணமாக நடுத்தர குடும்பங்களைச் சோந்த பெரும்பாலான பெற்றோர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு எப்படியும் பள்ளிகள் திறக்கப்படப் போவதில்லை, வீணாக எதற்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்..? அதனால் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளிலே குழந்தைகளைச் சேர்க்கலாம் என பெற்றோர்கள் பலர் முடிவெடுத்தனா். மேலும், கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்து நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கட்டாயமில்லை என்ற அறிவிப்பும் பெற்றோா் மத்தியில் நலங வரவேற்பை பெற்றது.

இந்த அறிவிப்புக்குப் பின்னா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனா். இவற்றுடன் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், மாணவா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆசிரியா்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் பெற்றோர்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், கல்வியாளா்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மாணவா் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், நிகழ் கல்வியாண்டில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.