புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
பெற்றோர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9,11 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்றும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது என்றும் புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.