நீட் நுழைவுத் தேர்வில், ஒடிசாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர் 720-க்கு 720 அதாவது முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப். 13ம் தேதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று (அக். 16) மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிசாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர், 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் இதுவரை யாரும் முழு மதிப்பெண்கள் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு வரலாற்றில் முதல்முறையாக மொத்த மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார் சோயிப் அஃப்டாப் மாணவர். இவர் கோடாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று உள்ளார். நீட் தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் சோயிப் அஃப்டாப்-பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.