மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

Photo of author

By Parthipan K

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாய் கடந்த சில மாதங்களாகவே அனைத்து துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எதிர்த்து போராடி வருகின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவின் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் சில முக்கியமான மாநிலங்களில் இதுபோன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மும்பையில் 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த மெட்ரோ ரயில்களில் 1350 நபர்கள் வரை பயணம் செய்யலாம். ஆனால் தற்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு 360 பேர் மட்டுமே பயணம் செய்ய இயலும். அதுமட்டுமன்றி 200 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் ஒவ்வொரு மெட்ரோ ரயிலுக்கும் இடையில் எட்டு நிமிட இடைவெளி இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெட்ரோ ரயில்கள் காட்கோபர் எனும் இடத்தில் இருந்து வெர்சோவா எனும் இடம் வரையிலான 11 கிலோ மீட்டர்களை கடக்கும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்கள் காலை 8:30 மணிக்கு தொடங்கி, 12 மணிநேரம் வரை இயக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பயணச்சீட்டுக்கு பதிலாக மக்கள் தங்களின் பயணச்சீட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.