ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட உள்ளதாக நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த போனஸ் தொகை வரும் விஜயதசமிக்கு முன்பாக ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் உள்ள ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப் ஊழியர்கள் தவிர்த்து, அனைத்து கெசட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் என ஏறக்குறைய 11.58 லட்சம் இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. இந்த போனஸ் தொகை வழங்க 2081.68 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒரு ஊழியரின் போனஸ் தொகை ரூ. 7000 முதல் 17,951 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த போனஸ் தொகை அனைத்தும் தசரா பண்டிகைக்கு முன்பாக ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாட இந்த போனஸ் தொகை உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.