மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் என்பவர்.இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரில் சாமியார் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றிருந்தார்.அந்த சாமியாரை அழைத்து தனது குடும்பத்தின் சோக கதையை விவரித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ராஜகுமாரின் குடும்பத்தின் சோக கதையை கேட்ட சாமியார் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனை எடுக்க வேண்டுமென்றால் சென்னைக்கு நீங்கள் வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பில்லி சூனியத்தை அகற்ற சென்னைக்கு வரும் பொழுது இரண்டு லட்சம் ரூபாய் பணமும் 2 கோழியையும் கையோடு கொண்டு வர வேண்டும் என்றும் அந்த சாமியார் கூறியுள்ளார்.இவரின் பேச்சை நம்பிய ராஜகுமார் தனக்கு உணவளித்து வந்த சொந்த மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று, பின்பு இரண்டு கோழி மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, உறவினர் ஒருவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார் ராஜகுமார்.
அந்த சாமியார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.பின்பு ராஜகுமார் மற்றும் அவரது உறவினர் வந்தவுடன் அவர்களை,ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகில் கூட்டிச் சென்று உள்ளார்.பின்னர் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சம் ரொக்கமும் இரண்டு கோழிகளையும் வாங்கிவிட்டு பூஜை சாமான்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு சாமியார் சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அவர் வரவில்லை.இப்பொழுது தான் அவர்களுக்கு மெல்ல மெல்ல தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்பது புரிய வந்தது.பிறகு இதுதொடர்பாக வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் ராஜகுமார் புகார் அளித்தார்.
இவர் கொடுத்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பின்பு கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர்.அந்த சோதனையில் இவர்களை ஏமாற்றிய நபர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் உல்லாச நகரைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது.பின்பு அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற பொழுது அங்கு யுவராஜுக்கு உதவியாளராக இருந்த அமர்நாத்,சுரேஷ் மற்றும் ஜெயந்தி,பாப்பா ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.ஆனால் யுவராஜ் வேளச்சேரியில் உள்ள வேறொரு நபரை ஏமாற்ற சென்றுள்ளார்.பின்பு அவரின் உதவியாளர்கள் கைது செய்த விஷயத்தை அறிந்த அவர் மாயமாகியுள்ளார்.
பின்பு இவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தது.இவர்கள்தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்களாக சுற்றி திரிந்து பிரச்சினையை கூறும் நபர்களிடம் தேடிச்சென்று பில்லி சூனியம் வைத்திருப்பதாக கூறி அவற்றை அகற்ற வேண்டும் என்றால் இரண்டு லட்சம் மற்றும் இரண்டு கோழி வேண்டும் என்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.மேலும் இதுகுறித்து விசாரணை துரிதப் படுத்தப்பட்டுள்ளது.
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் மக்கள் இது போன்ற மூட நம்பிக்கைகளை தற்போது வரை நம்பி பணத்தை இழக்கும் அவலம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.