தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை, திருவள்ளூர், உதகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது என்று எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பல மணி நேரம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இறுதியாக பதிவாளர் பாலமுருகன் அறையிலிருந்து 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், வழக்கத்திற்கு மாறாய் அங்கு அதிக அளவு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையத்தை சேர்ந்த நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உதகையில் மின்வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூபாய் இரண்டு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தீபாவளித் திருநாள் நெருங்குவதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.