விருதுநகர் மாவட்டத்தில் தாயும் மகளும் நகையைத் திருப்ப சென்ற இடத்தில் குறைவான வட்டியை கட்டி உங்கள் நகையை திருப்பி தருகிறேன் என்று கூறி 2 லட்சத்திற்கும் மேல் வைத்திருந்த பணத்தை ஏமாற்றி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ஆண்டாள்புரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயணன் மற்றும் தேவி. இவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா வயது 13 ஆகின்றது. தேவியும் பிரியங்காவும் ஏற்கனவே நகையை அடகு வைத்திருந்து அதை திருப்புவதற்காக சாத்தூர் பஸ் ஸ்டாண்டின் அருகில் இருக்கும் கனரா வங்கிக்கு சென்று இருக்கிறார்கள்.
அவர்களிடம் பணம் இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட ஒரு மர்ம நபர் அவர்களிடம் வந்து குறைவான வட்டி கட்டி உங்களது பணத்தை மிச்சப் படுத்தி உங்கள் நகையை நான் திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் அவர் உங்கள் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றால் எனக்கு ஸ்டாம்ப் ஒன்று வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் தேவி மிகவும் சந்தோஷம் அடைந்து பணத்தை மிச்சப்படுத்தும் நினைப்பில் கையில் வைத்திருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் 13 வயது மகள் பிரியங்காவிடம் ஒப்படைத்து விட்டு ஸ்டாம்ப் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
தேவி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தும் 13 வயது பிரியங்காவை ஏமாற்றிவிட்டு அந்த மர்ம நபர் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்த பிரியங்காவிடம் பணம் எங்கே என்று கேட்ட தேவிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரியங்கா அந்த மர்ம நபர் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என்று சொல்லியிருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த தேவி அருகிலுள்ள சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.