முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், செய்முறை தேர்வை சாதாரண தேர்வு போல் ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். புயல், கனமழை போன்ற பேரிடர்கள் வந்தால் கல்லூரிகளை வேறு தேதியில் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதர கல்லூரி வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.