அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு, இதற்கு முன் கல்லூரிகளில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்பில் 2020ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பருவத் தேர்வுகளில் அரிய தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து அரியர் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.