முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

0
128

2013ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது வரையில் பணி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் ,பட்டதாரி ஆசிரியர்கள் சேலத்தில் இருக்கின்ற முதல்வர் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு இடைநிலை, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, தகுதி தேர்வு நடந்தது அதிலே தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று வரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்துவருகின்றது. தேர்வு நடைபெற்று ஏழு வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் கூட இன்னமும் பணி நியமன ஆணை வழங்கப்படாத காரணத்தால், தேர்வு எழுதி பணிக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவாக பணி ஆணை வழங்கிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. ஆனாலும் இது தொடர்பாக அல்லது 7 ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் தொடர்பாக, தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்தநிலையில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றியடைந்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் இருக்கின்ற முதல்வர் வீட்டின் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி முதல்வர் வீட்டின் முன்பு வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முதல்வர் இன்றைய தினம் சேலத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையிலே, அதிகாலை முதலாகவே ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், நான்கு மணிநேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கும்போது, முதல்வரை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கிடையே ஈரோட்டில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஅதிமுகவிற்கும் டி.டி.வி தினகரனுக்கும் ரகசிய கூட்டா விலகியது மர்மம்!
Next articleதமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!