சென்னையில் பிரதான சாலைகளான நந்தனம் மற்றும் நுங்கம்பாக்கம் போன்ற சாலைகளின் சிக்னல்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். இதுபோன்று கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது குழந்தைகளை பெற்றோர்களே மற்றும் அந்த குழந்தைகளின் உறவினர்களே பிச்சை எடுக்க வாடகைக்கு அனுப்பி வைத்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாடகை பெறுவதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இவ்வாறான செயல் கடும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நந்தனம் மற்றும் நுங்கம்பாக்கம் சாலையில் இருக்கும் சிக்னல்களில் பிச்சை எடுத்த 8 பெண்கள் சென்னை காவல்துறையினரிடம் சிக்கினர். மேலும் குழந்தைகள் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்களா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில், 6 குழந்தைகள் காணாமல் போய் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அக்குழந்தைகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.