பரியேறும் பெருமாள் படத்தை பற்றி இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேட்ட கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
தமிழக அளவில் நிர்வாக துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி கேள்வி கேட்டதை அறிந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் பின்பு தேதி குறிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை 3-1-2021 இன்று காலை நடைபெற்றது.தமிழக அளவில் 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றது.
இந்த தேர்வு தாளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.அதில் சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பற்றி ஒரு கேள்வி வந்துள்ளதால் தேர்வு எழுத சென்ற அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட்டகத்தி,மெட்ராஸ்,காலா,கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாகும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பரியேறும் பெருமாள் படமானது முன்னோர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதிய கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசியது.இந்த படம் வெளியான போது அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வகையான விமர்சனங்கள் வெளியாகின.
அதாவது எப்பவோ நடந்த சாதிய பாகுபாடுகள் குறித்து படம் எடுத்து வளரும் தலைமுறையினருக்கு எதற்கு அதை நினைவு படுத்த வேண்டும் என்றும்,மேலும் இது போன்ற படங்களில் ஒரு தரப்பினரை மீண்டும் மீண்டும் விரோதியாக காட்டுவதால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை விரோதியாக பார்க்க வாய்ப்புள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த படத்தை பற்றி தமிழக அளவிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.ஒரு தரப்பினர் இந்த படத்தை பற்றி கேள்வி கேட்டதை பெருமையாக பேசி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள் ” என்ற தமிழ் திரைபடம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்??
என்று தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.
இந்த கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்களில் சாதிய ரீதியாக இருப்பதும்,மேலும் சம்பந்தமே இல்லாமல் படத்தை தயாரித்த நிறுவனத்தின் பெயரான நீலம் புரொடக்சன் பதிலாக வந்துள்ளதும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது மட்டுமல்லாமல் மேலும் சில கேள்விகள் பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தங்களை மையப்படுத்தி கேட்டிருந்ததால் டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.