அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாமக விளங்கியது.
காலம் காலமாக வடமாவட்டங்களில் பலமான வாக்கு வங்கியை கொண்ட கட்சியான பாமகவின் ஓட்டுகள் தான் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து வந்தது.கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைய பாமக தனித்து நின்றது ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை பாமகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தால் அக்கட்சி மிகப் பெரிய வெற்றியை அடைந்து ஆட்சியை பிடித்திருக்கும் என்று அக்கட்சி தலைமை தனது தவறை உணர்ந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு தான் இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டு வர திமுக பலவிதங்களில் முயற்சி செய்து பபயனளிக்காமல் போனது.ஒரு கட்டத்தில் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வருவதை தவிர்த்து விட்டு பாமகவின் அதிருப்தி வாக்குக்களை அறுவடை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளையும் துவக்கியது.ஆனாலும் அதிருப்தி வாக்குகள் அந்த அளவிற்கு தங்களுக்கு கிடைக்காது என்பதாலும், தமிழக அரசியல் சூழல் திமுக மற்றும் பாமக கூட்டணி ஏற்பட மாறி வருவதாலும் மீண்டும் திமுக தலைமை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பாமக தரப்பில் கேட்கப்படும் வன்னியர்களுக்கு தேவையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்னிறுத்தி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஐந்து கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 29ஆம் தேதியிலும் போராட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும் அதிமுக தரப்பிலிருந்து எந்தவித சாதகமான முடிவும் எடுக்கப்படவில்லை.இதனால் அதிருப்தியான மருத்துவர் ராமதாஸ் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்ட சமூகத்திற்கே மராட்டியத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு கூட வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதில் தமிழகம் சமூகநீதியின் தொட்டிலாம்! என்று காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி பாமகவுக்கு தேவையான வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்து பாமகவை திமுகவின் கூட்டணியில் தக்க வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்து அன்றே மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணியில் இணையுமா? அல்லது சட்டமன்ற தேர்தலை மீண்டும் பாமக தனித்து களம் காணுமா? என்ற கேள்விக்கு இந்த பொதுக்கூட்டத்தில் விடை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பாமகவுடன் திமுக கூட்டணி வைத்தால் விசிக திமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சில தினங்களுக்கு முன்பு திருமாவளவன் பேசியிருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் இந்த முறை தனி சின்னத்தில் தான் விசிக போட்டியிடும் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பேச்சுக்களை வைத்து பார்க்கும் போது திமுக மற்றும் பாமக கூட்டணி பேச்சுக்கள் நடந்து வருவதை தான் உறுதிபடுத்துகிறது.
ஒருவேளை பாமகவுடன் திமுக கூட்டணி வைத்தால் 2021 ல் திமுக ஆட்சி அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவர முயற்சிக்கும் பிரசாந்த் கிஷோரின் வியூகம் வெல்லுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.