முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது செய்யப்பட்டிருக்கிறார் இதன் காரணமாக மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் காடுவெட்டி குரு. இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் வருடம் அவர் காலமானார்.
இந்த நிலையில், அவருடைய மறைவுக்குப் பின்னர் காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் பாமகவிற்கு இணக்கமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காடுவெட்டி குரு அவர்களின் குடும்பத்தார் பாட்டாளி மக்கள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். பாமக மீது பல குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்திருக்கிறார்கள்.
காடுவெட்டி குருவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது . ஆனால் அந்த விழாவிற்கு காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு சமயத்தில் அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியதாக தெரிவித்து, கனலரசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.