கௌதம் பேட்டையை சேர்ந்த வானவராயன் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்து வருகின்றார். வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வானவராயன் பணம் வசூல் செய்யப் போனபோது ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வானவராயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் வானவராயனுக்கும் கவுதம் பேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் தொழில் ரீதியாக பகையை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
சென்ற வாரத்தில் கூட அந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் வானவராயன் தரப்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
அதன் காரணமாக, வானவராயன் உறவினர்கள் திமுகவின் பிரமுகர்கள் வீட்டின் முன்பு சூறையாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வானவராயன் திமுக பிரமுகரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் திமுக பிரமுகர், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள், என்று எட்டு பேரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.