வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?
தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்காக வாக்களர்களை கவர பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் ஸ்டாலின் அறிவிக்கும் பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தான் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.இது சம்பந்தமாக அதிமுக அமைச்சர்கள் மருத்துவர் ராமதாசை சந்தித்து பேசியதில் தனி ஒதுக்கீடு என்பதை தளர்த்தி குறைந்த பட்சம் 15 சதவீத உள் ஒதுக்கீடாவது கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அதிமுக அரசு இறுதி நேரத்தில் தாக்கல் செய்தது.இது தேர்தலுக்கான அரசியல் நாடகம்,ஆளுநர் கையெழுத்து போட்டால் தான் சட்டமாகும்,திமுக ஆட்சிக்கு வந்தால் தான் இதை கூட செயல்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் ஒரு சில தினங்களில் ஆளுநர் கையெழுத்திட்டு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில் தான் திமுக தரப்பு பெரிதும் நம்பியிருந்த வன்னியர் சமுதாய வாக்குகள் கைவிட்டு போகும் சூழலை உணர்ந்து அடுத்த என்ன செய்யலாம் என அக்கட்சி தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வன்னியர் வாக்குகளை கவர அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அந்த சமுதாயத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக திமுகவில் வன்னியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சேலத்தை சேர்ந்த வீரபாண்டியார் மறைவிற்கு பிறகு வன்னியர்களுக்கான முக்கியத்துவம் திமுகவில் குறைந்துள்ளதை அக்கட்சியினரே அறிவர்.
இந்நிலையில் எதையவது செய்து திமுகவின் பலமான வாக்கு வங்கியாக விளங்கும் வன்னியர் வாக்குகளை பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.அந்த வகையில் திமுகவில் உள்ள மூத்த வன்னியர் தலைவர்களில் யாருக்காவது துணை முதல்வர் வழங்கவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.அந்த வகையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.