தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி விளையாடுவது, நாற்று நடுவது என வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் டெக்னிக்கை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, நேற்று வாக்காளரின் வீட்டிற்கு சென்று டீ வைத்துக் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
திமுக பலமுறை வென்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் இந்த முறை டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதி மக்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்துவருகிறது. வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே நாள்தோறும் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த குஷ்புவிற்கு ஆதரவாக தற்போது அவருடைய கணவரும், பிரபல நடிகருமான சுந்தர் சி களமிறங்கியுள்ளார்.
தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் சுந்தர் சி, குஷ்பு தம்பதி வீடு, வீடாக சென்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல் நாள் சற்றே தயக்கத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுந்தர்சி, தொகுதி மக்களிடையே செம்ம கலகலப்பாக உரையாடிய படியே வாக்கு சேகரித்தார். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் பேண்ட் வாத்தியங்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று மனைவி குஷ்புவிற்காக துண்டு அறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்த சுந்தர் சி, அங்குள்ள பெண்களிடம் கலகலப்பாக பேசி மனைவி குஷ்பு போட்டியிடும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
மற்றொருபுறம் நமச்சிவாயபுரத்தில் வீடு, வீடாக சென்று குஷ்பு தனியாக வாக்கு சேகரித்தார். அப்போது தன்னுடன் செல்ஃபி கேட்ட பெண்களுடன் நின்று அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.