சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களத்தில் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் தேர்தல் பறக்கும் படையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பணப்பட்டுவாடா குறித்த கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று எம்.சி சம்பத்தின் சம்பந்தியும், தனியார் பள்ளி கூட்டமைப்புகளின் மாநில செயலாளருமான இளங்கோவன் நடத்தும் வீடு, பள்ளி, நிதி நிறுவனங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று மாலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்தனர்.
அதன் பின்னர் பள்ளியின் மெயின் கேட் பூட்டப்பட்டு வருமான வரிச்சோதனை தொடங்கியது. மாலையில் தொடங்கி நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. அதேபோல சென்னை தி.நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் ரூ.6 கோடி ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.