விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

0
162
ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel
ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான நிலைக்குக் கொண்டு வர முடியாமல் போனதால் சந்திரனில் தரையிறக்கும் இந்தியாவின் கனவு சிதைந்தது. இந்நிலையில் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பது பற்றிய தேடல் ஆரம்பமானது.

இதனையடுத்து தற்போது நிலவில் தரை இறக்கும் முயற்சியின் போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த இந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சுற்றுக் கலன், லேண்டர், ஆய்வூர்தி ஆகிய மூன்று பாகங்களைக் கொண்ட சந்திரயான் 2 என்ற விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி அன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

இந்த முயற்சியில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த பிறகு, பிரக்யான் ஆய்வூதியுடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர, மறுபுறம் ஆர்பிட்டர் எனப்படும் சுற்றுக்கலன், குறைந்தபட்சமாக 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுப் பாதையில் நிலவை தொடர்ந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த முயற்சியின் இறுதிகட்டமாக விக்ரம் லேண்டரை, நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் தரை இறக்கும் செயல்பாட்டை சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இஸ்ரோ மேற்கொண்டது. மெல்ல, மெல்ல விக்ரமின் வேகம் அதிகரிக்கப்பட்டு அதே வேளையில், தேவையான இடத்தில் வேகத்தைக் குறைத்து, கோணத்தை மாற்றும் மிகச் சவாலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

நிலவில் இருந்து 2 கிலோ மீட்டர் என்ற உயரத்தை விக்ரம் லேண்டர் அடைந்த போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது. இதனையடுத்து ஆர்பிட்டர் மூலமாக, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தொடர்பான தெர்மல் இமேஜ் புகைப்படத்தை, தற்போது ஆர்பிட்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் லேண்டர் உடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் சிவன் கூறியுள்ளார். தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தகவல் தொடர்பு மீட்டமைக்கப்படும் என்றும் சிவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.
Next articleகுடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.