கொரோனா சிகிச்சைக்கு வரும் புதிய மருந்து! டிஜிசிஐ அனுமதி!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்தாலும், அது பயனளிக்காமல் போகிறது. இறுதியில் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்ற ஒற்றை வரியில் பெரும்பாலானோர் கைவிரிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிச் செல்வதால், அடுத்தடுத்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இருந்தாலும், கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், இது சிறியதாக உதவும் என ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஸ்புட்னிக், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அதே நேரத்தில், சிகிச்சைக்கு ரேம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிடஸ் கேடிலா நிறுவனத்தின் விராஃபின் என்ற ஆன்டிவைரல் மருந்தை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் டிஜிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த அன்டிவைரல் மருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை விரைந்து குணப்படுத்த உதவும் என ஜிடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிசிஐயின் அனுமதியைத் தொடர்ந்து மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விராஃபின் ஆன்டிவைரல் மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், தொற்று பாதித்தவர்களை விரைந்து குணப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.