தமிழகத்தில் தேர்தல் முடிந்து 22 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மொத்த தமிழகமும் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.கடந்த ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக நடைபெற்ற அசாம் மாநில சட்டசபை தேர்தலும் கடந்த 6ஆம் தேதி முடிவுற்றது.
இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் மார்ச் மாதம் 27ஆம் தேதி ஆரம்பமான சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மேற்குவங்கத்தில் இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு மேற்குவங்கத்தில் நாளைய தினம் சுமார் 35 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது.
ஆகவே நாளையுடன் மேற்குவங்கத்தில் மொத்தம் இருந்த 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைகிறது. மேற்குவங்கத்தில் நாளை தேர்தல் முடிவடைய இருப்பதால் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் என்று தெரிவிக்கப்படும் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதற்கு இருக்கின்ற தடையும் முடிவுக்கு வருகிறது.
நாளை மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடலாம். வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையும் நடைபெறும் என்பதால் அதன் பிறகு எக்ஸிட் போல் முடிவுகள் போன்றவற்றை ஊடகங்கள் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து விட்ட சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் வாக்கு எண்ணிக்கை நாளுக்காக காத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 3 வார காலமாக தமிழக அரசியல் களம் அமைதியாகவே இருந்து வருகிறது. நாளை எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும் அந்த நொடியில் இருந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியும் வரையில் தமிழக அரசியல் களம் மீண்டும் விறுவிறுப்படையும் என்று தெரிவிக்கப்படுகிறது.