கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை!
நாளுக்கு நாள் கொலை,கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி உஷா(35) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கர்,உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாயார் மாங்காடு போலீஸில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மாங்காடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது.சிங்கராயபுரத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் ஒரு மூட்டையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பாஸ்கரின் மனைவி உஷா மற்றும் மைத்துனர் பாக்யராஜ் இரண்டு பேரும் நேரடியாக கொலை செய்திருக்கலாம் என்ற விதத்தில் விசாரணை மேற்கொண்டனர்.இதனையடுத்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் சிறப்பு தனி படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.நேற்று முன்தினம் பாஸ்கரின் மனைவி உஷாவையும்,நேற்று பாக்யராஜ்(37) மற்றும் அவரின் நண்பர்கள் வெங்கடேசன்(40), கோகுல் (24) ஆகியோரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாக உஷா சந்தேகப்பட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உஷா, வீட்டிலிருந்த இரும்பு குழாயில் பாஸ்கரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.உடனே உஷா தனது அண்ணனான பாக்யராஜை வரவழைத்து உள்ளார்.உடனே பாக்யராஜ் அவரது நண்பர்களை அழைத்து வந்து பாஸ்கரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்பு என்ன செய்யலாம் என யோசித்த அவர்கள் பாஸ்கரரின் உடலை ஒரு காரில் ஏற்றி கல்குவாரிக்கு எடுத்து சென்று உடனிருந்த பெட்ஷீட் மற்றும் இரத்தக்கரை படிந்த அனைத்தையும் குவாரி அருகே உள்ள ஒரு குட்டையில் வீசி விட்டு, பாஸ்கரின் உடலை மட்டும் கல்குவாரியில் வீசி விட்டு தலைமறைவாகி உள்ளனர்.உஷா மற்றும் அவரது அண்ணனின் இந்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.