இநதியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டும்! திகார் சிறையிலிருந்து பா.சிதம்பரம் கோரிக்கை.
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் சிறையில் இருந்து தன் குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டர் மூலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில், “நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்ற கருத்து அபாயகரமானது. தமிழ் மக்கள் மட்டுமல்ல; மற்றவர்களும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மொழிகளின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறோம். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல.
தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.
இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திகார் சிறையிலிருந்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குடும்பத்தினர் மூலம் டிவிட்டர் வாயிலாக அழுத்தமான பதிவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.