தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக உரையாடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த உரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லாத்துறைகளிலும் நடைபெற்று வரும் பணிகள் நியமனங்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் செய்வது கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பத்து வருடங்களுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது இந்த நிலையில், பொதுமக்களிடம் நல்ல நிர்வாகம் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக எந்த ஒரு அமைச்சரும் நேரடியாக காவல்துறையினரை அணுகக்கூடாது. அந்தத் துறையைத் தான் கவனித்து வருவதால் எந்த ஒரு புகாராக இருந்தாலும் தன்னிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தேர்தலில் வெற்றியடைந்த பலருக்கு அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. தற்சமயம் அமைச்சராக இருப்பவர்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். துறையில் தவறுகள் நடந்தால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் எச்சரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.