மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!
வெங்காயம் விளையும் பல மாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகின்றன.அவர்களை போலவே தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் கையிருப்பில் உள்ளதால் அதை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்த விலையில் விநியோகிக்க முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, தமிழக்கத்திற்கான வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 33 க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னையிலுள்ள 200 ரேஷன் கடைகளில் இந்த குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்க்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூறிய அமைச்சர். மேலும் ஆந்திராவில் இருந்தும் தமிழகத்திற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
வெங்காய விலை உயர்வை சமாளிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பாக நடமாடும் நியாய விலைக்கடையின் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 22 க்கு விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ மத்திய அரசுடனான இணக்கமான அரசியலால் இந்த இக்கட்டான சூழ்நிலையை தமிழக அரசு சரியாக கையாண்டுள்ளது என்று பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.