தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாத வருமானம் இன்றி வேலை புரியும் பணியாளர்களுக்கு உதவி தொகையாக ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி எந்த சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர் பாபுவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பெரும் தொற்றினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோரும் மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையை அறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி திருக்கோயில்களில் மாத வருமானம் இல்லாமல் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ரூ.4000 உதவித்தொகையும், 10 கிலோ அரிசியும், 15 வகை மளிகை பொருட்களும் வழங்கப்படும் என சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்துள்ளார்.
பிகே சேகர்பாபு வெளியிட்ட செய்தியில், இந்து சமய அறநிலையத்துறை 36000 கோவில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்கள் வருமானம் 10 ஆயிரத்துக்கு கீழ் மட்டுமே உள்ளது. இதிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே எந்த திருக்கோயில்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் பிற பணியாளர்களுக்கும் நிலையான சம்பளம் என்று எதுவும் இல்லை. பெரும் தொற்று காரணமாக பக்தர்களின் வருகையும் இல்லாத காரணத்தால் போதிய வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மக்களின் வருகை இல்லாமல் மாத வருமானம் இன்றி தவித்து வரும் அர்ச்சகர்கள் ,பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழியர்களின் கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் ஊழியர்களுக்கு ரூ.4000 மற்றும் 10 கிலோ அரிசி,15 வகை மளிகை பொருட்கள் வழங்க ஆணையிட்டார்.
உதவி தொகை மற்றும் மற்ற சலுகைகள் திருக்கோயில் பணியாளர்கள் இல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் கூறினார். 14000 திருக்கோயில் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.
இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது பிறந்த நாள் தினமான ஜூன் மூன்றாம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார்.