இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்!
கடந்த வருடம் முழுவதும் ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே படித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு இது சவாலான விஷயம் என்றாலும் கூட, பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே, பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறினார்கள்.
இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்குதல், பாட புத்தகம் வழங்குவது உட்பட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையின் படி அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் தரவை சரி பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 1 ம் வகுப்புக்கான சேர்க்கை தொடங்கியது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவர் உள்ளார். இவர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்
த்த வேண்டும் என்றும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த அனைவருக்கும் தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1000 என்று வழங்கி வருகிறார்.
இது மட்டும் இல்லாமல், கடந்த வருடம் கொரோனா லாக்டவுன் காலத்தில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு செல்போனும் தன்னுடைய சொந்த செலவில், அனைத்து மாணவருக்கும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பல சலுகைகளை அளித்து வருகின்றன.
அரசு பல சலுகைகள் வழங்கினாலும், தன்னால் முடிந்த விசயங்களை மாணவர் சேர்க்கையின் போது செய்துவருகிறேன் என்றும், இது தனக்கு பிடித்து இருப்பதாகவும், இதனால் தனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் எனவே தன்னால் முடிந்த அளவு தொடர்ந்து செய்து வருவேன் என்றும் கூறினார். தலைமையாசிரியரின் இந்த செயல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களை மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.