தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சென்ற மாதம் ஏழாம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக சென்றமாதம் சட்டப்பேரவை தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருந்த பிச்சாண்டி தலைமையில் அன்றையதினம் சட்டசபை கூட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு சட்டசபை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. சட்டசபை மரபுப்படி சட்டசபை சபாநாயகர் அப்பாவு மற்றும் பேரவைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் அழைத்து வருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி பிறகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய உரையை தொடங்குவார் இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டத்தொடர் எத்தனை தினங்கள் நடைபெறும் என்பது தொடர்பாக இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அவை நிகழ்ச்சிகள் முடிவுற்ற பின்னர் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை தினங்கள் நடத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்து சபாநாயகர் அப்பாவு முடிவுகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.
அதே போல எப்பொழுதும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கினால் அது தமிழக சட்டசபை விளங்கக்கூடிய சென்னை ஜார்ஜ் கோட்டையில் தான் ஆரம்பமாகும் ஆனால் தற்போது நோய் தொற்று பரவல் அதிகம் இருப்பதால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான வசதி இல்லாத காரணத்தால், இந்தக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறயிருக்கிறது.அதேபோல சென்ற ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து சமயத்திலும் இதே கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முதல் நாள் சட்டசபை கூட்டத் தொடரிலேயே பல முக்கிய பிரச்சினைகளை எழுப்புவதற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஸ்டாலின். ஆனால் அதற்கு மிக சாதுரியமாக பதிலளித்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினரை மூக்கின் மீது விரல் வைக்க வைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் சமயத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக அமரப் இருக்கிறது. அதோடு முதல்வராக இருந்த சமயத்தில் மிக சாதுர்யமாக செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சி தலைவராக அமர இருக்கின்றார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க கூடாது என்று திமுக பலவாறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது. ஆனாலும் திமுகவின் சதித்திட்டம் அதிமுகவிடம் எடுபடவில்லை என்று சொல்கிறார்கள்.
ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றால் நிச்சயமாக அவர் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வராக இருக்க கூடிய ஸ்டாலின் அவர்களால் எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க இயலாது என்று அந்த கட்சியினர் பயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாக இருக்கிறது.