தமிழக ஆளுநர் உரையில் லோக்ஆயுக்தா அமைப்புக்கு புதுவேகம் அளிப்பது தொடர்பாகவும், ஊழல் ஒழிப்புத்துறை வேகமாக செயல்படுவது தொடர்பாகவும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எல்லா மாநிலத்திலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதோடு பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த சென்ற 2014ம் வருடம் மத்திய அரசு சார்பாக சட்டம் இயற்றப்பட்டது.
இருந்தாலும் 20 மாநிலங்களில் இந்த லோக் ஆயுக்தா அமைப்பை உண்டாக்கிய போதும் கடந்த அதிமுக ஆட்சியில் அந்த சட்டம் தாமத பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுத்தார்கள். நீதிமன்றமும் இது குறித்து அப்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழ்நிலையில், கடந்த 2018ஆம் வருடம் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு உண்டாக்கப்பட்டது. இதில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டோர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்க அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் அவர் அதில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நீதிபதி தேவதாஸ் தலைமையிலான தமிழக லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் நடந்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு கடந்த அதிமுக ஆட்சியில் லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பாக சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம்21ம் தேதியான இன்றைய தினம் தமிழகத்தில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதில் ஆளுநர் உரையில் தூய்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவது தான் இந்த அரசின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் போன்றவற்றின் மீதான புகார்களை விசாரிப்பதற்கு லோக்ஆயுக்தா அமைப்பிற்கு புதிய அதிகாரம் வழங்கப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப் பணி ஆணையரகம் உஷார் படுத்தப்பட்டு நிலுவையில் இருக்கின்ற புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் பல அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொது சேவைகள் முறைப்படுத்த சேவைகள் உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
லோக் ஆயுக்தா மட்டுமல்லாமல் தமிழக விழிப்பு பணி ஆணையரகம் உஷார்படுத்தப்பட்டு கடந்த ஆட்சியில் பதவியில் இருந்த அமைச்சர்கள் மீது அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறையில் வழங்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை விரைவுபடுத்தப்படும் என்பதே ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சாராம்சமாகும்.
இதனால் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் விசாரணை மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக ஊழல் புகார் பட்டியலை வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் இருந்த ஆளுநர் இப்போதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழங்கப்பட்ட புகார்களில் விசாரணை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.