அரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு
திமுக பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டது.பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதனையடுத்து தமிழக அரசு அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்ய நாளை முதல் இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்து இயக்கம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர்“ பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திற்காக ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து வசதி வழங்கபடுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு டிக்கெட், அவருக்கு உதவியாக வரும் நபருக்கு ஒரு டிக்கெட், 3-ம் பாலினத்தவருக்கு ஒரு டிக்கெட் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி நிறங்களில் இலவச பஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த இலவச பேருந்து டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..