ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபாய் போனஸ்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பலர் வேலைகளை இழந்துள்ளனர்.அதே போல பலரின் ஊதியமும் பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சில சலுகைகளையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 1 லட்சத்துக்கு அதிகமான தொகையை நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.இந்த தொகையானது கொரோனா தொற்று காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உலக அளவில் சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது.கொரோனா பாதிப்பின் காரணமாக இந்நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் அனைவருக்கும் 1.12 லட்சம் ரூபாயை தொற்று நோய் போனசாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது இதுகுறித்த அறிவிப்பை மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை மக்கள் அதிகாரி கேத்லீன் ஹோகன் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ளார்.கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் கார்ப்பரேட் துணைத்தலைவர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் போனசை அறிவித்து வருகிறது.இந்த போனஸ் அறிவிப்பு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் தற்போது 1 லட்ச ரூபாய் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த போனஸ் அமெரிக்கா மற்றும் உலக அளவில் பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த போனஸ் தொகைக்காக இந்த நிறுவனமானது 200 மில்லியன் டாலர் தொகையை செலவிட போவதாக தெரிவித்துள்ளது.போனஸ் வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவிடவுள்ள இந்த தொகையானது அந்த நிறுவனத்தின் இரண்டு நாள் லாபமாகும்.
இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களான லிங்க்ட்இன், கிட்ஹப் மற்றும் ஜெனிமேக்ஸ் உள்ளிட்ட நிறுவன ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகையானது வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, பேஸ்புக் நிறுவனம் தங்களுடைய 45,000 ஊழியர்களுக்கு தலா 1,000 டாலரும், அமேசான் நிறுவனம் அதன் முன்னணி தொழிலாளர்களுக்கு 300 நாட்களுக்கான விடுமுறை போனஸையும் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.