அதற்கு பதில் இது? அவ்வளவுதான்! என்று கூலாக சொல்லும் கல்லூரி மாணவர்கள்!
கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் போதை ஊசி எடுத்துக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் அந்த நேரத்தில் கூட மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தினால், போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கு மாற்று யோசனையாக மருந்து நிறுவனங்களிடம் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி செலைன் கலந்த நீரின் மூலமாக இளைஞர்கள் உடம்பில் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் இதற்கு அடிமையாகவும் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இச்சம்பவம் தொடர்ந்து நடப்பதாக திருச்சி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை கண்காணிப்பதற்காக ஒரு டீமை நியமித்திருந்தார். அந்த டீம் தான் சிறப்பாக செயல்பட்டு 7 பேரை பிடித்து இருக்கிறார்கள்.
திருச்சி ஜீவா நகர் ரயில்வே கேட் இன் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பல் என தெரிந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 470 மாத்திரைகள், ஒரு பாட்டில் செலின் மருந்து பாட்டில்கள், 5 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய டூவீலர் களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராம்நாத், நந்தகுமார், பாலாஜி, பிரகாஷ், குமார், குமரேசன் மற்றும் ஒருவர் என 7 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் பாராட்டியதோடு, திருச்சி மாநகரில் உள்ள மருத்து கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் மற்றும் மருந்து விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்யும்பட்சத்தில் அக்கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் தன்னிடம் பேசிய போது அவர் சமீப காலமாகவே திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் பலர் போதை ஊசி செலுத்தி கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது ஆணையருக்கு தெரியவரவே அதைத் தொடர்ந்து இந்த டீமை செயல்படுத்தி அந்த நபர்களை கைது செய்துள்ளோம். இவர்கள் அதிக அளவில் அதனை தூளாக்கி செலின் வாட்டர் கலந்து கை மற்றும் இடுப்பு பகுதியில் சிரஞ்சின் மூலமாக ஏற்றிக் கொள்கிறார்கள்.
அது கடுமையான போதை தரும் என்கிறார்கள். நாங்கள் பிடித்த 7 பேரும் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் விசாரிக்கையில் சரக்கு மற்றும் கஞ்சாவின் விலை அதிகமாக இருப்பதால் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். இச்செயல் உடம்பிற்கு மிகக் கெடுதல் தரும் என்பதை இளைஞர்கள் புரிந்து மீண்டும் இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்றும் எச்சரித்தார்.