விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!!
இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1128 பேர் பயணிக்க கூடிய வசதியில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் தானாக இயங்கும் கதவுகள், ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவின் 40 நகரங்களை இணைக்கும் வகையில் 10 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே துறை அமைச்சரகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் கூடுதலாக 10 வந்தே மாதரம் பாரத் ரயில்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கென ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹைதராபாத்தை சேர்ந்த மேத்தா நிறுவனத்திடம் 44 வந்தே பாரத் ரயில்களுக்கு, மின்னணு சாதனங்களை வழங்க உடனடியாக உற்பத்தியை துவங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ரயில்வே வாரியம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது.இந்த ஆலோசனையில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள் மற்றும் உற்பத்திப் பிரிவின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ரயில்களை இயக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மூன்று உற்பத்தி பிரிவுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மாதத்திற்கு 6 அல்லது 7 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய முடியும் என ரயில்வே ஆணையம் கணக்கிட்டுள்ளது.