தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 165 இடங்களில் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக சென்ற மாதம் 17ஆம் தேதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாடினார்.
இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலமாக சென்றடைந்தார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்டோர் டெல்லிக்குப் பயணமானார்கள். சென்ற முறை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஸ்டாலின் இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து பேச இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் பன்னிரண்டு முப்பது மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அதோடு அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும், கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிக அளவிலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் பல முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும், குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஒருபுறம் பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் மாறி மாறி திமுக தலைமையை சந்தித்தாலும் கூட மறுபுறம் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. அதிலும் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தெரிவித்து அவமானப்படுத்துவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. அதனால் மத்திய அரசு தமிழக அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.
அதோடு பல சமயங்களிலும் மத்திய அரசை சரமாரியாக விமர்சனம் செய்து வந்து கொண்டிருந்த சமயத்தில் கூட தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்து வருவதாக சொல்கிறார்கள். அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி தருமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
மத்திய அரசு தவறு செய்தாலும் கூட அதனை மேம்போக்காக சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கு அதை உணர்த்தி விட்டு மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தங்களுக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக வல்லமை கொண்டதாக இருந்தது. ஆனால் தற்சமயம் திமுக அரசு அவ்வாறு ஒரு நிலைப்பாட்டை முன்னெடுக்கவில்லை.சரியோ தவறோ மத்திய அரசு எதைச் செய்தாலும் அதில் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து மத்திய அரசை விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில், மத்திய அரசு தமிழக அரசு வைக்கும் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்ற முன் வரும் என்ற கேள்வியும் எழுகிறது.