சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு!
திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில், தெற்குப் பாகனூரை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் இருவரும் சகோதரர்கள். 42 வயதான ராஜேந்திரனுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர்களிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜேந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி காலை தன் அண்ணன் வீட்டின் முன்பு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த, செல்வத்தின் மனைவியான தனது அண்ணி முத்துலட்சுமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் முத்துலட்சுமி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து செல்வம் போலீசில் அளித்த புகாரின் பேரில் ராம்ஜி நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அருள்செல்வி வாதாடினார். மேலும் பல சாட்சிகளை விசாரித்து விசாரணை முடித்து நீதிபதி ஸ்ரீவட்சன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு தெரிவித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ஆயிரம் அபராதமும், மேலும் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.