திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுஜித் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார் என்பது தெரிந்ததே. இந்த துயர சம்பவத்தால் தமிழ்நாடே துயரக்கடலில் மூழ்கியது
இந்த நிலையில் சுஜித்தை மீட்க அரசு இயந்திரங்கள் முழுமையாக முடுக்கிவிடப்பட்டு என்பதும் ரிக் இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டும் மீட்புப்பணி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் ஆழ்துளைகிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க சரியான உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாததுதான் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவர்களை மீட்கும் உபகரணத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் அரசு முழு முயற்சியுடன் பொருட்செலவை கருதாமல் மீட்பு பணியில் இருந்த நிலையிலும் எதிர்க்கட்சிகள் மீட்பு பணி குறித்து குறை கூறி வந்தன். இந்த நிலையில் சுஜித்தின் மரணத்திற்கு அவனது பெற்றோர்களும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. ஆழ்துளை கிணற்றை தோண்டி அதில் தண்ணீர் வராததால் அதனை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததே சுஜித்தின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை சரியான முறையில் மீட்கவில்லை என்று கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்