மதுரை அருகில் இருக்கின்ற கள்ளழகர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை முதல் மாலை வரையில் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்தார்கள். இதில் மூலவர் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் விஸ்வரூப அலங்காரத்தில் அருள்பாலித்தார், உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு சென்றார்கள். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் மலர் மாலைகளையும், எலுமிச்சம் பழங்களையும், சந்தனங்களையும் காணிக்கையாக செலுத்தி வணங்கி சென்றார்கள்.
அழகர் மலை உச்சியில் இருக்கின்ற முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் உள்ளிட்டவை நடந்தன. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை தக்கார் வெங்கடாஜலம் துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டார்கள்.