இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!
விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு திரையரங்கில் திரையிடப்படவில்லை. எனவே அந்த பகுதி விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் இறங்கினர். திரையரங்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்ததாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரிய வந்தது.
இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், விஜய் ரசிகர்கள் 32 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் மீண்டும் கிடைத்த சிசிடிவி தகவல்களில் இருந்து நேற்று மேலும் 18 பேரை கைது செய்ததால், பிகில் படம் பார்க்க வந்த 50 பேர் தற்போது கைதிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரசாங்கமும் போலீசும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதை பாராட்டியே தீரவேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி விஜய்க்கு மட்டும் இல்லாமல் யார் படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னர் எந்த நடிகருக்கும் இப்படி ஒரு கெடுபிடி இல்லை என்றும் உதயநிதி படம் கூட எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இந்த ஆட்சியில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் விஜய்க்கு மட்டும் ஏன் இந்த முட்டுக்கட்டை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
நடிகை கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.