இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள்,கோவில் திருவிழாக்க்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் கேரளாவிலிருந்து மட்டுமே 50% பதிவாகிறது.
இதனையடுத்து அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி தமிழக அரசு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வருவோர் இனிமேல் கொரோனாவிற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும்.அதுமட்டுமில்லாமல் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதாவது இதுவரையில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு வெறும் வெப்பமானி பரிசோதனை மட்டுமே நடத்தி வந்த நிலையில், தற்போது ஆர்டிபிசிஆர் சான்று அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்துடன் மேலும் சில நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்திற்கு பேருந்து, ரயில், மற்றும் விமானம் மூலம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், அந்த சோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தமிழக அரசு விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.